இதனைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், பிரபஞ்சத்தின் முதல் விண்மீன் மண்டலத்தைப் படம் எடுக்கவும், விஞ்ஞானிகளின் 30 வருட உழைப்பினாலும், 83 ஆயிரம் கோடி ரூபாய் பொருட்செலவிலும் உருவாக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது தான் "JAMES WEB" எனப்படும் விண்வெளித் தொலைநோக்கி ஆகும். இந்தத் தொலைநோக்கி, இன்றுவரை பல விண்மீன் மண்டலங்களை மிகத் தெளிவாகப் புகைப்படம் எடுத்துள்ளது. ஆனால் அதன் குறிக்கோளை அடைவதற்கு இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறது.
பிரபஞ்சத்தின் தொடக்கத்திற்கான காரணம் பற்றிய அறிவியலாளர்களின் ஊக்கங்களை இங்குக் காண்போம்.
'அணுவை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது' என்ற கூற்றைப் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அணுவின் உருவாக்கம் நடைபெறாமல், பெருவெடிப்பு என்ற ஒன்றே நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், பெருவெடிப்பின் தொடக்கக் கட்டத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் அளவானது ஒரு அணுவை விட, பல நூறு கோடி மடங்கு சிறியதாக இருந்தது.
அப்பயிருக்க, அணு எப்படி உருவாக்கப்பட்டது, என்பதற்கான விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் ஒரு சிறு முன்னேற்றம் கிடைத்தது.
தொடக்க காலத்தில் பிரபஞ்சத்தில் ஒன்றும் இல்லாத வெற்றிடமாக இருந்தது. அப்படி, ஒன்றும் இல்லாத இடத்திலிருந்து ஏதேனும் உருவாக்க முடியுமா? என்ற கேள்விக்கான ஆராய்ச்சிகள் பல வருடங்களாக நடந்து கொண்டு வந்தன. பிறகு 1931 ஆம் ஆண்டில், Fritz sauter இன்னும் இயற்பியலாளர், கண்டிப்பாக அதற்கு வாய்ப்புள்ளது என்று கூறினார். ஆனால் அதனை அவரால் தெளிவாக விளக்க முடியவில்லை.
அதனால், 'ஒன்றும் இல்லாத இடத்திலிருந்து ஏதேனும் ஒன்றை உருவாக்க முடியும்' என்று கோட்பாட்டை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
பிறகு 1951 ஆம் ஆண்டில், "julian schwinger" எனும் இயற்பியலாளர், ஒரு துகள் உருவாக்கம் பற்றிய அவரது கோட்பாட்டை முன் வைத்தார்.
அதாவது, "வெற்றிடத்தில் அதிகப்படியான மின்புலம் செயல்படும்போது, அந்த மின்புலம் சிறிதளவு சிதைவடைந்து, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் போன்ற துகள்களை உருவாக்கும்" என்று கூறினார். (பாசிட்ரான் என்பது எலக்ட்ரானின் எதிர்த்துகள் (anti matter)ஆகும். மேலும் இது நேர்மின் தன்மை கொண்டது. )
இதுவே schwinger effect என அழைக்கப்படுகிறது.
பூமியின் மின்புலத்தால் இந்த துகள்கள் உருவாக சாத்தியம் இல்லை. நியூட்ரான் விண்மீன்கள் மற்றும் கருந்துளை போன்றவற்றின் அதிகப்படியான மின்புலத்தால் மட்டுமே இது சாத்தியம்.
பிறகு 1995 ஆம் ஆண்டில், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இதனை ஒரு சோதனையாகச் செய்து, அதில் வெற்றியும் கண்டனர். இந்தச் சோதனையில், எலக்ட்ரான்கள் 1000 km/s எனும் வேகத்தில், வெற்றிடத்தில் நகர்த்தப்பட்டன. இதன் முடிவில் எலக்ட்ரான்கள், ஒளிரும் தன்மையுடன் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை வெளிப்படுத்தின. இந்த ஆற்றல் ஒரு சில, புதிய துகள்களையும் உருவாக்கியது.
எனவே, வெற்றிடத்தில் அதிகப்படியான மின்புலத்தைச் செலுத்துவதன் மூலமாகவே நாம் ஒரு குறிப்பிட்ட துகளை உருவாக்க முடியும் என்பது இங்குத் தெளிவாகிறது. ஒரு துகளை உருவாக்க முடிந்தால் அது போன்ற பல துகள்களையும் உருவாக்க முடியும். இந்த துகள்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, கட்டமைத்து, ஒரு அணுவாகவும் மாற்ற வாய்ப்புள்ளது. இதன் மூலமாக எதிர்காலத்தில் மனிதனே அணுவை உருவாக்கினாலும் ஆச்சரியமில்லை.
இதனால், அதிகப்படியான மின்புலத்தின் காரணமாகக் கூட பெருவெடிப்பு நிகழ்ந்து அதன் மூலம் அணுக்களும் உருவாகி இருக்கலாம் என்ற ஒரு ஊகமும் நிலவி வருகிறது. ஆனால், அந்த மின்புலம் யாரால் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதைத்தான் நம்மால் ஊகிக்க முடியவில்லை.
பிரபஞ்சத்தின் தொடக்கத்தைக் கணிதத்தின் மூலமாகவும் நம்மால் ஓரளவு அனுமானிக்க முடியும். உதாரணமாக, பெருவெடிப்பிற்கு முன்பு பிரபஞ்சத்தில் ஒன்றுமில்லை, என்பதை நாம் பூஜ்ஜியம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
-1 மற்றும் +1 என்ற இரண்டு எண்களைக் கூட்டினால் பூஜ்ஜியம் வரும்.
அதேபோல் -1000 மற்றும் +1000 என்ற எண்களைக் கூட்டினாலும் கூட பூஜ்ஜியம் தான் வரும்.
எனவே பூஜ்ஜியம் என்பது இரண்டு எதிரெதிர் நிகழ்வுகளுக்கு இடையே இருக்கும் ஒரு சமநிலை என்பது இங்குத் தெளிவாகிறது. இந்த சமநிலையில் ஏற்பட்ட ஒரு சிறு மாற்றமே பெருவெடிப்பிற்குக் காரணமாகிறது. இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டால், பிரபஞ்சத்தின் தொடக்கத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
இருளாற்றல் தான் பிரபஞ்சத்தின் தொடக்கத்திற்குக் காரணம் என்ற ஊகங்களும் நிலவி வருகின்றன. ஏனெனில் இன்றளவில் கூட, பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகம் குறையாமல், அதிகரித்துக் கொண்டு செல்வதற்கு இருளாற்றலே ஒரு காரணமாகும். இந்த இருளாற்றல் தான் பிரபஞ்சத்தைத் தொடக்கி வைத்திருக்கும் என்றும் சில ஊகங்கள் உள்ளன.
இன்றுவரையில் இருளாற்றல் பற்றிய ஒரு முழு புரிதல் கிடைக்கவில்லை. பெருவெடிப்பைத் தொடக்கி வைத்ததற்குக் கண்டிப்பாக ஏதேனும் ஒரு ஆற்றல் தான் காரணமாக இருக்க வேண்டும். அந்த ஆற்றல் தான் இருளாற்றல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்றுவரை இது பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகத்தை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த ஆற்றல் எதனால் உருவாக்கப்படுகிறது என்பதற்கான தரவுகள் நம்மிடம் இல்லை.
பெருவெடிப்பிற்கு முன்பு கூட இந்த பிரபஞ்சம் முழுவதும் இருளாற்றலாலும் இருள் துகள்களாலுமே நிறைந்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஊகம் வலுப்பெறுமா இல்லையா என்பது எதிர்காலத்தில் தெரியும்.