வியாழன் என்பது ஒரு தோல்வியடைந்த நட்சத்திரமாகும். இந்த கிரகம் இப்போதிருக்கும் நிறையை விட 80 மடங்கு அதிகமாக இருந்திருந்தால், அதுவும் சூரியனைப் போல் மற்றொரு நட்சத்திரமாக இருந்திருக்கும். அதன் நிறை குறைவாக இருப்பதால் அதனால், அணுக்கரு இணைவின் மூலம், ஹைட்ரஜன் அணுக்களை ஹீலியம் அணுக்களாக மாற்ற முடியவில்லை. எனவே, அதனால் ஒரு நட்சத்திரமாக மாற முடியவில்லை. ஆனாலும் அதன் மையப் பகுதியானது 27,000°c எனும் வெப்ப நிலையில் கொதித்துக்கொண்டிருக்கிறது. மேலும், சூரியனுக்கு அடுத்தபடியாக, இந்த சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய பொருள் வியாழன் கிரகம் ஆகும்.
சூரியன் உருவான பிறகு அதனைச் சுற்றியிருந்த மாசுத்துகள்கள், மற்றும் அந்தவழியாகச் சென்றுகொண்டிருந்த விண்கற்கள் அனைத்தும் ஒன்றுடன்ஒன்று கலந்து, வியாழன் கிரகத்தை உருவாக்கின. இந்த வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றி வரும்போது, அருகிலிருந்த மாசுத்துகள்கள் அனைத்தையும், தன்னுள் இழுத்துக் கொண்டு, பெரிதாக வளரத் தொடங்கியது. அதன் நிறை அதிகரிக்க அதிகரிக்க, அதன் ஈர்ப்பு விசையும் அதிகமாகிக் கொண்டே வந்தது. பூமியில் நீங்கள் 100 கிலோ எடையுள்ளவராக இருந்தால், வியாழன் கிரகத்தில் உங்கள் எடை 250 கிலோவாக இருக்கும். ஏனென்றால் வியாழனின் ஈர்ப்பு விசை, பூமியை விட 2.5 மடங்கு அதிகம்.
வியாழன் கிரகம் ஒரு வாயுக்கோளம் ஆகும். அதன் மேற்பகுதி முழுவதும் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களால் நிரப்பப்பட்டுள்ளது. அதன் உட்பகுதி திடநிலையில் உள்ளதா அல்லது திரவநிலையில் உள்ளதா என்பது இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
வியாழன் கிரகத்தில் ஒரு நாள் என்பது 9 மணி நேரம் மட்டுமே. இது, நமது சூரியனை முழுவதுமாக சுற்றி வருவதற்கு 12 வருடங்கள் எடுத்துக் கொள்ளும்.
செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே இருக்கக்கூடிய, "Asteroid belt" எனும் பகுதியிலிருந்து, பூமியை நோக்கி வரக்கூடிய விண்கற்கள் அனைத்தையும், வியாழன் கிரகம் தன்னை நோக்கி இழுத்துக் கொள்வதால், பூமி பாதுகாக்கப்படுகிறது. இது போலவே செவ்வாய் கிரகமும் பாதுகாக்கப்படுகிறது.
ஏறத்தாழ 1300 பூமிகளை வியாழன் கிரகத்தினுள் நம்மால் நிரப்பிவிட முடியும். அதன் விட்டம் 1,39,820 km ஆகும். வியாழனைத் தவிர சூரியக்குடும்பத்தில் உள்ள மற்ற அனைத்துக் கோள்களின் நிறையைச் சேர்த்தால் கூட, வியாழனின் நிறைக்கு ஈடாகாது. அதன் நிறையானது, பூமியின் நிறையை விட 315 மடங்கு பெரியது. மேலும், இதன் காந்தப்புலமானது பூமியை விட 20 பலமானது. ஆனாலும், 1000 வியாழன் கிரகங்களை, நம்மால் சூரியனில் நிரப்பிவிட முடியும்!
வியாழன் கிரகத்தில் "The red spot" எனப்படும், ஒரு சிவப்புநிற வட்டப்பகுதியை அனைவரும் பார்த்திருப்பீர்கள். வியாழனில் ஏற்பட்ட புயலினால்தான் இந்தப் பகுதி உருவாக்கப்பட்டது. கடந்த 300 வருடங்களாக இந்தப் புயல் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது. இந்தப் பகுதியில் இரண்டு பூமிகளை முழுவதுமாக நிரப்ப முடியும்.
இப்போதிருக்கும் நிறையிலேயே ஒருவேளை, வியாழன் கிரகம் ஒரு நட்சத்திரமாக மாறினால் கூட, பூமிக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஏனென்றால், சூரியனிலிருந்து பூமி இருக்கும் தொலைவை விட, நான்கு மடங்கு அதிக தொலைவில் வியாழன் கிரகம் உள்ளது. எனவே, வானில் பார்க்கும் போது அது ஒரு சிறு நட்சத்திரமாக மட்டுமே தெரியும்.
சூரியனிலிருந்து புறப்பட்ட ஒளியானது வியாழனை வந்தடைய 43 நிமிடங்கள் ஆகும். ஒவ்வொரு வருடமும் வியாழன் கிரகம் இரண்டு சென்டிமீட்டர் அளவில் சுருங்குகிறது. அதிலிருந்து வெளியேற்றப்படும் வெப்ப இழப்பின் காரணமாக, அதன் நிறை குறைகிறது.
வியாழன் கிரகத்திலும் கடல்கள் உள்ளன. ஆனால் அவை உலோக ஹைட்ரஜனால் ஆனவை. அதிக அழுத்தத்தின் காரணமாக இந்தக்கடல் உள்ள ஹைட்ரஜன், திரவ நிலையிலும் இல்லாமல் திடநிலையிலும் இல்லாமல், அதற்கு இடைப்பட்ட நிலையில் உள்ளது. வியாழன் கிரகத்திற்கு நிலப்பரப்பு இல்லை. அது, நகர்ந்து கொண்டிருக்கும் வாயுக்களாலும் திரவங்களாலும் நிரப்பப்பட்டுள்ளது.
வியாழனின் நிலவுகள்:
வியாழன் கிரகத்தைச் சுற்றி 79 நிலவுகள் இருப்பதாகத் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் "IO" எனும் நிலவானது, நமது சூரியக்குடும்பத்திலேயே அதிகப்படியான, இயங்கிக் கொண்டிருக்கும் எரிமலைகளைக் கொண்டுள்ளது.
மேலும், இதன் மற்றொரு நிலவான "யூரோபா" எனும் நிலவின் உட்பகுதியில், பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவில், உப்பு நீர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் மேற்பகுதி, பனியால் நிரப்பப்பட்டுள்ளது. இங்கு உயிரினங்கள் உருவாகியிருக்கவும் வாய்ப்புள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அடுத்ததாக உள்ள "Ganymede" எனும் நிலவுதான், சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய துணைக்கோளாகும். இது புதன் கிரகத்தை விடப் பெரியது. இதன் அடிப்பகுதியில் நீர் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் ஊகித்துள்ளனர். ஆனால் இங்கே வளிமண்டலம் இல்லாததால், உயிரினங்கள் வாழ வாய்ப்பில்லை.