![]() |
Image: PICRYL |
மனிதனின் பார்வையில் பிரபஞ்சம் என்பது அழகிற்கும் அமைதிக்குமான ஒரு இருப்பிடமாகவே தெரிகிறது. இவற்றுடன் பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் கூட தன்னுள்ளே அடக்கியுள்ளது.
நமது சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் உள்ளன. இது நமக்குத் தெரிந்ததே. சூரியனைப் போலவே 40 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் இந்தப் பால்வெளி அண்டத்தில் உள்ளன! அந்த நட்சத்திரங்களைச் சுற்றிலும் பல கிரகங்கள் வலம் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இந்த பிரபஞ்சத்தில் தற்போது வரையில், நமது பால்வெளி அண்டதைப் போலவே பத்தாயிரம் கோடிக்கும் மேலான விண்மீன் மண்டலங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது! எனவே, இவ்வளவு பெரிய ஒரு அமைப்பில், நாம் மட்டும் தனியாக இல்லை என்று பல விஞ்ஞானிகள் கருதினர்.
எனவே 2009ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 7 ஆம் நாளில் கெப்லர் (KEPLER) எனும் பெயர் கொண்ட தொலைநோக்கியானது விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த வானியலாளரான Johannes Kepler என்பவரின் நினைவாகவே இந்தத் தொலைநோக்கிக்கு, 'கெப்லர்' என்று பெயரிடப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தில், பூமியைப் போன்று இருக்கக்கூடிய பல்வேறு கிரகங்களைக் கண்டுபிடிப்பதே இதன் நோக்கமாகும். இந்தத் தொலைநோக்கியானது இதுவரை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. அவற்றில், 2 முதல் 12 கிரகங்கள், பூமியைப் போலவே வாழத் தகுதி உள்ள கிரகங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் கெப்லர் 452b எனும் கிரகமாகும். நாசா விஞ்ஞானிகள் இதனை இரண்டாம் உலகம் என்றே அழைத்தனர்.
கெப்லர் 452b கிரகத்தின் சூரியன்:
![]() |
Image: PinkPik |
இந்தக் கிரகத்தின் சூரியனானது கெப்லர் 452 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, பூமியிலிருந்து 1400 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது! இதன் நிறையானது கிட்டத்தட்ட, நமது சூரியனின் நிறைக்குச் சமமாகவே உள்ளது. இதன் விட்டம் நமது சூரியனை விட 11% மட்டுமே அதிகமாகும். மேலும், இந்த நட்சத்திரமானது நமது சூரியனை விட 20 % அதிகமான ஒளியை உமிழ்கிறது. இந்த நட்சத்திரம், நமது சூரியனைப் போலவே ஒரு மஞ்சள் குறுநட்சத்திரம் (Yellow Dwarf star) ஆகும். ஆனால், இந்த நட்சத்திரத்தின் வயதானது சூரியனை விட 140 கோடி ஆண்டுகள் அதிகமாகும்! சூரியனின் வயது 460 கோடி ஆண்டுகள். இந்த நட்சத்திரத்தின் வயது 600 கோடி ஆண்டுகள் ஆகும். இன்னும் சில நூறு கோடி வருடங்களில் இந்த நட்சத்திரம் முழுவதுமாக அழிந்து விடும் என்று கூறப்படுகிறது!
இந்த நட்சத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலையானது 5700 கெல்வின் என்ற அளவில் உள்ளது. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையும் கிட்டத்தட்ட இதுவே. எப்படி இந்த நட்சத்திரமானது நமது சூரியனின் பல பண்புகளுடன் ஒத்துப் போகிறதோ, அதுபோலவே இந்த நட்சத்திரத்தின் கிரகமும் நமது பூமியுடன் பல பண்புகளில் ஒத்துப்போகிறது. இப்பொழுது, இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரக்கூடிய கெப்லர் 452b எனும் கிரகத்தைப் பற்றி விரிவாகக் காண்போம்.
கெப்லர் 452b - பூமியின் நகல்:
நமது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தூரமான 14,95,97,877 கிலோமீட்டர் தூரமானது 1AU (1 astronomical unit) என்று குறிப்பிடப்படுகிறது. இதுபோலவே இந்த கெப்லர் 452b கிரகத்திற்கும் அதன் சூரியனுக்கும் இடையே இருக்கக்கூடிய தூரம் 1.046AU ஆகும். கிட்டத்தட்ட நமது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கக்கூடிய தூரத்திற்குச் சமமாகவே இது உள்ளது!
அடிப்படைப் பண்புகள் :
பூமியின் விட்டமானது 12,000 கிலோமீட்டர் ஆகும். இந்த கெப்லர் 452b கிரகத்தினுடைய விட்டம் 20000 கிலோ மீட்டர் ஆகும். அதாவது, இந்தக் கிரகம் பூமியை விட 60% பெரியது! மேலும் இந்த கிரகத்தின் ஈர்ப்பு விசையானது பூமியை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த கிரகத்தின் மேற்பரப்பில் நீங்கள் நடந்தால், உங்கள் தோளில் உங்கள் எடையுள்ள மற்றொரு மனிதரை, தூக்கிக் கொண்டு நடப்பது போல் இருக்கும்!
![]() |
Image: wikimedia commons |
இந்த கிரகத்தில் ஒரு வருடம் என்பது 385 நாட்கள் ஆகும். மேலும் இது, பூமியைப் போலவே தன்னைத்தானே சுற்றிக் கொண்டு அதன் சூரியனையும் சுற்றி வருகிறது! இதனால் சூரியனின் வெப்பமானது இந்த கிரகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான அளவில், கிடைக்கிறது. மேலும் இந்த கிரகமானது, ஒரு நீள் வட்டப்பாதையில் தனது சூரியனைச் சுற்றி வருவதால் இந்த கிரகத்திலும், பூமியைப் போலவே கால நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன!
கெப்லர் 452b உயிர்கள் வாழத் தகுந்த கிரகமா?
ஒரு கிரகமானது அதனுடைய நட்சத்திரத்திற்கு மிக அருகிலிருந்தால் அந்தக் கிரகம் மிகவும் வெப்பமாகவும், தொலைவிலிருந்தால், மிகவும் குளிராகவும் இருக்கும். இவை இரண்டிற்கும் இடையில் சரியான வெப்ப நிலையில் ஒரு கிரகம் அமைந்திருந்தால் மட்டுமே, அங்கு நீரானது திரவ வடிவத்தில் இருக்கும். இந்தப் பகுதி "the habitable zone" என்று அழைக்கப்படுகிறது.
கெப்லர் 452b கிரகமும் உயிர்கள் வாழத் தகுந்த habitable zone எனும் பகுதியில் தான் உள்ளது. எனவே இந்த கிரகத்தில் நீரானது திரவ நிலையில் உள்ளது. கெப்லர் தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்டு the habitable zone எனும் பகுதியில் இருக்கக்கூடிய கிரகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
![]() |
Image: PICRYL |