அணுகுண்டு வெடிப்புகளால் நகரும் விண்கலம்-THE PROJECT ORION

Image: wikimedia Commons

நாசாவினுடைய  Parker Solar Probe எனும் விண்கலம் தான் இதுவரை மனிதனால் அனுப்பப்பட்ட விண்கலங்களிலேயே அதிகப்படியான வேகத்தை அடைந்த ஒன்றாகும். இதன் வேகம் வினாடிக்கு 176 கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும். ஆனால் இந்த வேகத்தில் சென்றால் கூட சூரியக் குடும்பத்தை விட்டு முழுவதுமாக வெளியே செல்வதற்கு 2000 வருடங்களுக்கு மேல் ஆகும். எனவே, அருகில் இருக்கக்கூடிய மற்றொரு நட்சத்திரத்தை நெருங்குவதெல்லாம் தற்போதைக்கு நடக்காத ஒன்றாகும்.

1946 ஆம் ஆண்டில், Stanislaw Ulam, எனும் இயற்பியலாளர், "அணு துடிப்பு உந்துவிசை" (The nuclear pulse propulsion) என்ற கோட்பாட்டை முன் வைத்தார். இதன்படி, விண்கலங்களில் எரிபொருள்களைப் பயன்படுத்தி அவற்றை நகர்த்துவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட நேர இடைவெளிகளில், அவற்றின் பின்புறமிருந்து அணுகுண்டுகளை வெடிக்க வைப்பதன் மூலமாக, அவற்றை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான உந்தத்தை ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு வெடிப்பின் பொழுதும் விண்கலமானது முன்பிருந்ததை விட அதிகமான வேகத்தில் முன்னோக்கி நகரும். எனவே இதன் மூலமாக, நட்சத்திரங்களுக்கிடையான பயணங்களை (interstellar travel) மேற்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக, விஞ்ஞானிகள் கருதினர். 

இந்த "அணு துடிப்பு உந்துவிசை" எனும் கோட்பாட்டை மையமாக வைத்து, 1958 ஆம் ஆண்டில் "ஓரியன்" (ORION) எனும் விண்கலத்தின் கட்டமைப்பு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பூமியிலிருந்து அணுகுண்டு வெடிப்புகளை நிகழ்த்தலாம் என்று திட்டமிட்டிருந்த விஞ்ஞானிகள், பிறகு, விண்கலத்தை, விண்வெளிக்குக் கொண்டு சென்ற பிறகு, அங்கிருந்து வெடிப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டு இருந்தனர். 

Image: pexels

மேலும் இந்த விண்கலத்திற்கு உள்ளே இருப்பவர்கள் அணுகுண்டு வெடிப்பினால் பாதிக்காமல் இருப்பதற்காக blast shield, shock absorber போன்ற அமைப்புகளும் பொருத்தப்பட்டன. விண்கலத்தின் அடிப்பகுதியில், நிகழும் வெடிப்புகளின் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக, அதன் அடியில் spring போன்ற அமைப்புகளும் பொருத்தப்பட்டன. 

இந்த விண்கலத்தை விண்வெளியில் ஏவுவதன் மூலமாக, ஒரு வினாடியில் 10,000 கிலோ மீட்டர் என்ற தூரத்தை நம்மால் அடைந்து விட முடியும், என்று விஞ்ஞானிகள் கருதினர். 

இந்தத் திட்டத்திற்காக 1958 ஆம் ஆண்டில் DARPA எனும் அமெரிக்க நிறுவனம், வருடத்திற்கு சுமார் 8 கோடியே 41 லட்சம் ருபாய், நிதி ஒதுக்கியது. பிறகு இத்திட்டத்தில் அமெரிக்க விமானப்படையும், நாசாவும் இணைந்தன. அமெரிக்க விமானப்படையானது இத்திட்டத்தில், ராணுவப் பயன்பாடு ஏதேனும் இருந்தால் மட்டுமே, நிதி அளிப்பதாக ஒப்புக்கொண்டது. 

1959 ஆம் ஆண்டில், 0.5 கிலோகிராம் எடையுள்ள, மரக்கட்டைகளாலும் அலுமினியத்தாலும் செய்யப்பட்ட, ஓரியன் விண்கலத்தினுடைய  one-meter model எனும் சோதனை மாதிரியானது, சோதித்துப் பார்க்கப்பட்டது. இச்சாதனையில் 6 தொடர் வெடிப்புகளுக்கு பிறகு, 23 வினாடிகளில், 186 அடி உயரத்தை, நம் விஞ்ஞானிகள் அடைந்தனர். 

ஓரியன்-திட்டத்தின் குறைபாடுகள்:

அணுகுண்டுகள் வெடிப்பின் காரணமாக, பூமியிலும், விண்வெளியிலும் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படும். மேலும் அவற்றிலிருந்து வெளியேறும் சில ஆபத்தான கதிர்வீச்சுகள், முழுவதுமாக நீங்குவதற்கு பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். 

அணுக்கரு இணைவினால் வெடிக்கும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தினால், 10000km/s, என்ற உயர் வேகத்தை அடையலாம் என்று Freeman Dyson எனும் இயற்பியலாளர் கணித்திருந்தார். ஆனால் அதற்கு, சுமார் 75,000 தொடர் வெடிப்புகள் நிகழ வேண்டும். 

Image: wikimedia commons 

எவ்வளவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டாலும், அணுகுண்டு வெடிப்புகளால் வெளியேற்றப்படும் சில ஆபத்தான கதிர்வீச்சுகளின் காரணமாக, உள்ளே இருப்பவர்களில் குறைந்தபட்சம், ஒருவராவது இறக்க நேரிடும் என்று  Freeman Dyson கணித்திருந்தார். 

நம்மால், 10,000 km/s என்ற வேகத்தை அடைய முடிந்தாலும் ஒளியின் வேகத்தில் இது வெறும் 3% மட்டுமே ஆகும். நமது சூரியக் குடும்பத்திற்கு மிக அருகில் இருக்கும் Proxima Centauri எனும் நட்சத்திரம் கூட, நம் சூரியக் குடும்பத்திலிருந்து நான்கு ஒளியாண்டுகள் அப்பால் உள்ளது. 10,000 km/s எனும் வேகத்தில் சென்றால் கூட அந்த நட்சத்திரத்தை அடைவதற்கு, நமக்கு 120 ஆண்டுகள் தேவைப்படும். மீண்டும் பூமியை அடைவதற்கு மற்றொரு 120 வருடங்கள் தேவைப்படும். எனவே மொத்தமாக 240 வருடங்களுக்கு மேல் நாம் பயணம் செய்ய வேண்டும். 

மேலும், இந்த ஓரியன் விண்கலமானது, பல நூறு டன் எடையுள்ள வெடிகுண்டுகளைச் சுமந்து செல்ல வேண்டி இருக்கும். 

இதனால், ராணுவத்திற்குப் பெரிய அளவில் பயன்பாடு இல்லாத காரணத்தால், 1964 ஆம் ஆண்டில் அமெரிக்க விமானப்படை இத்திட்டத்திலிருந்து விலகியது. சுற்றுச்சூழலுக்கு பெரும் அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினாலும், வேதியியல் தொடர்பான, வேறு சில சோதனைகளில் ஈடுபட்டிருந்ததாலும், அதே 1964 ஆம் ஆண்டில் நாசாவும், இத்திட்டத்திலிருந்து விலகியது. 

இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தால், 1965 ஆம் ஆண்டில் இத்திட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது. இருப்பினும் இன்றளவில் கூட, அணுகுண்டு வெடிப்புகளின் மூலம், விண்கலங்களை நகர்த்துவதற்கான ஆராய்ச்சிகள், நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. 

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post