இந்தப் பிரபஞ்சத்தில், குறிப்பிட்ட நிறையக் கொண்டுள்ள ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட அளவு ஈர்ப்பு விசையையும் கொண்டுள்ளது. நமது சூரியக் குடும்பத்தின் 99.86% நிறை சூரியனில் தான் உள்ளது. எனவே அதன் ஈர்ப்பு விசையும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.
அப்படியிருக்க, மற்ற கிரகங்கள் அனைத்தையும், அது தன்னுள் ஈர்த்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றனவே! எப்படி? 🤔
சூரியனின் ஈர்ப்பு விசை, அனைத்துக் கிரகங்களையும் தன்னிடம் ஈர்த்துக் கொண்டிருக்கும் போதும், அவை சூரியனுக்குள் விழாமல் அதனைச் சுற்றி வருகின்றன எனும்போது, கண்டிப்பாக அந்தக் கிரகங்களின் மீது, சூரியனின் ஈர்ப்பு விசைக்கு எதிரான மற்றொரு விசை செயல்பட வேண்டுமல்லவா? அந்த விசையின் பெயர் தான் "மையவிலக்கு விசை" (Centrifugal force) ஆகும்.
நியூட்டனின் முதல் விதிப்படி, ஒரு பொருள் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது, அதன் மீது எந்த ஒரு புறவிசையும் செயல்படாத வரையில், அதன் திசைவேகத்திலோ அல்லது, திசையிலோ எந்தவித மாற்றமும் ஏற்படாது. மேலும், ஒரு பொருள் எப்பொழுதும் நேர்கோட்டில் செல்லவே விரும்பும். எனவே, நேரான பாதையில் செல்லக்கூடிய ஒரு பொருள், மற்றொரு பொருளின் ஈர்ப்பு விசையினால், வளைவான பாதையில் நகரும்போது, மீண்டும் அதன் பாதையை நேரானதாக மாற்றுவதற்கான ஒரு விசை அந்தப் பொருளின் மீது செயல்படும். அந்த விசை தான், மையவிலக்கு விசை ஆகும்.
உதாரணமாக, நீங்கள் மகிழுந்தில் சென்று கொண்டிருப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வளைவான பாதையில் அந்த மகிழுந்து வளையும்போது, வெளிப்புறம் நோக்கிய ஒரு விசை உங்களின் மீது செயல்படுமல்லவா?
அந்த விசைதான், இந்த மையவிலக்கு விசை ஆகும். இதனைக் கீழே உள்ள சமன்பாட்டின் மூலம் வரையறுக்கலாம்.