நியூட்ரினோ என்பது ஒரு அணுவடித்துகளாகும். இதனைத் தமிழில் "நுண்நொதுமி" என்றும் அழைக்கலாம். ஒவ்வொரு வினாடியும், பல லட்சம் கோடி நியூட்ரினோக்கள் நமது உடலின் வழியே புகுந்து செல்கின்றன. ஆனால் அவற்றை நம்மால் உணர முடியாது. ஏனென்றால், அவை நம் உடலிலுள்ள அணுக்களுடன் பெருமளவில் வினை புரிவதில்லை. 1930 ஆம் ஆண்டில் இவற்றைப் பற்றிய ஊகங்கள் முன்வைக்கப்பட்டு, 1956 ஆம் ஆண்டில், "Frederick Reines" மற்றும் "Clyde Cowan" ஆகியோரால் இவை, கண்டுபிடிக்கப்பட்டன.
நமது சூரியக் குடும்பத்தில், நியூட்ரினோக்கள், அதிக அளவில் சூரியனிலிருந்து தான் உருவாகின்றன. சூரியனில் நிகழும் அணுக்கரு இணைவு, மற்றும் அணுக்கருப் பிளவினால், இவை உருவாக்கப்படுகின்றன.
இது தவிர, சில கதிரியக்கப் பொருள்களின் சிதைவினாலும் நியூட்ரினோக்கள் உருவாக்கப்படுகின்றன. வாழைப்பழங்களில் இருந்தும் நியூட்ரினோக்கள் உருவாகின்றன. வாழைப்பழங்களில், potassium எனும் கதிரியக்கப் பொருள் உள்ளது. அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளின் காரணமாகவே நியூட்ரினோ உருவாக்கப்படுகிறது.
நியூட்ரினோவின் நிறையைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள், இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுவரை, எலக்ட்ரான் நியூட்ரினோ, டவ் (tou) நியூட்ரினோ, மற்றும் மியூவோன் நியூட்ரினோ எனும் மூன்று வகையான நியூட்ரினோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரு நியூட்ரினோத் துகள், இயக்கத்தில் இருக்கும்போது, ஒரு வகையில் இருந்து மற்றொரு வகை நியூட்ரினோவாக மாறுவதை, 1998 ஆம் ஆண்டில் ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால் இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை.
பெருவெடிப்பு நிகழ்ந்த போது, துகள்களும் எதிர்த்துகள்களும் சமமான அளவில் வெளியிடப்பட்டன. ஆனால் எதிர்த்துகள்கள் அழிக்கப்பட்டு, துகள்களால் மட்டுமே இந்த பிரபஞ்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோக்களைப் பற்றி ஆராய்வதன் மூலமாக இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
( எதிர்த்துகள் என்பது ஒரு துகளின், எதிர்மின்சுமையுடைய மற்றொரு துகளாகும். ஒரு துகளுக்கும், அதன் எதிர்த்துகளுக்கும், மின் சுமையைத் தவிர எந்தவித மாற்றமும் இருப்பதில்லை. ஒரு துகளும், அதன் எதிர்த்துகளும், மோதும்போது, அவை இரண்டும் சிதைந்து, ஆற்றலாக மாறிவிடுகின்றன. )
நியூட்ரினோ துகள்களுக்கு எந்த விதமான மின்சுமையும் இல்லை. நியூட்ரினோவின் எதிர்த்துகளைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நியூட்ரினோ துகள்கள் ஒளியின் வேகத்திற்கு நிகரான வேகத்தில் செல்லக்கூடியவை. அவற்றின் வேகம், 2,99,338 km/sec ஆகும்.
பிரபஞ்சத்தில் அதிக அளவில் நிறைந்துள்ள பொருள்கள் நியூட்ரினோக்களே. இவற்றை "பேய்த்துகள்" என்றும் அழைக்கின்றனர். ஏனென்றால், சினிமாக்களில், பேய்கள் சுவற்றின் வழியாக ஊடுருவி செல்வது போல, நியூட்ரினோக்களும் அனைத்து பொருள்களின் வழியாகவும் ஊடுருவி செல்கின்றன. நமது பூமியையே ஊடுருவிச் செல்லும் தன்மையுடையவை இவை! இதற்குக் காரணம் நியூட்ரினோக்களின் நிறையும் அளவும், ஒரு எலக்ட்ரானை விட பல மில்லியன் மடங்கு குறைவாக இருப்பது தான்.
ஈர்ப்பு விசை மற்றும், ஒரு சில வலுவற்ற விசைகளுக்குக் கட்டுப்படுவதால்தான் நியூட்ரினோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பல நூறுகோடி நியூட்ரினோக்கள் உங்கள் உடல் வழியே ஊடுருவி சென்றாலும், உங்கள் வாழ்நாள் முழுவதிலும், ஒன்று அல்லது இரண்டு நியூட்ரினோ துகள்கள் மட்டுமே, உங்கள் உடலில் உள்ள ஏதேனும் ஒரு அணுவைத் தாக்கும். மற்றவை அனைத்தும் உடலின் வழியே ஊடுருவிச் சென்று விடும்.
நியூட்ரினோக்களைத் தடுத்து நிறுத்துவது, நடக்காத காரியம் ஆகும். சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களைத் தடுக்க, பல நூறு கோடி கிலோமீட்டர் தடிமன் கொண்ட, ஒரு பொருள் தேவைப்படும்.
ஒருவேளை, பல ஒளி ஆண்டுகள் தள்ளி வேற்று கிரகவாசிகள் இருந்தால், அவர்களுக்கு, தகவல்களை ஒளி வடிவத்திலோ அல்லது வேறு சில அலைகள் வடிவத்திலோ அனுப்புவது மிகவும் சிரமமானது. ஏனென்றால் அவை விண்வெளியில் உள்ள மற்ற சில துகள்களாலோ, அல்லது அலைகளாலோ சிதைக்கப்படலாம். ஆனால், நியூட்ரினோக்கள் மூலமாகத் தகவல் அனுப்புவது பாதுகாப்பானதாகும். ஏனென்றால் அவை, மற்ற எந்த பொருள்களுடனும் வினை புரியாமல், அவற்றை ஊடுருவிச் சென்று விடும்.
ஆனால் நியூட்ரினோக்கள் வழியாக தகவல் அனுப்பும் அளவிற்கு, தற்போதைய அறிவியல் வளரவில்லை. இருந்தாலும், மற்ற சில கிரகங்களிலிருந்து நியூட்ரினோ வடிவில் வரும் தகவல்களை, பூமியில் உள்ள நியூட்ரினோ உணர்விகளின் (neutrino detectors) மூலமாக
நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
நியூட்ரினோக்களைப் பற்றிய ஆய்வுகள், குவாண்டம் உலகில், பல கேள்விகளுக்கான விடைகளை கண்டுபிடிக்க உதவும் என்பதால், இது, இயற்பியலில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.