உயிரினங்கள் வாழத் தகுந்த கிரகங்கள் - PART2

An artistic depiction of the universe featuring an Earth-like planet with vibrant blue oceans, green continents, and white swirling clouds, illuminated by a nearby bright star. The background is a cosmic expanse filled with glowing galaxies, colorful nebulae, and countless stars, creating a sense of mystery and wonder about the possibility of life beyond Earth.

நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனியாகத்தான் உள்ளோமா? பூமியிலிருந்து பிரபஞ்சத்தின் எல்லையை அடைய வேண்டுமெனில் சுமார் 4,650 கோடி ஒளியாண்டுகள் பயணித்திருக்க வேண்டும். ஒரு ஒளியாண்டு என்பது, ஒளி ஒரு வருடத்தில் கடக்கும் தூரமாகும். அதாவது, சுமார் 9.46 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில், நாம் தனியாக உள்ளோம் என்று எளிதில் முடிவு செய்துவிட முடியாது.

பிரபஞ்சம் எனும் இந்த அமைப்பில், பூமியைப் போல உயிர்கள் வாழத் தகுதியுள்ள பல கிரகங்களை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அவற்றில் உண்மையில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பது இன்னும் தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது.

நம்மிடம் இருக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி போன்ற நவீன உபகரணங்கள் மூலம், ஒரு கிரகத்தின்:

  • வளிமண்டலம்,
  • வெப்பநிலை,
  • வேதிப்பொருட்களின் இருப்பு
    போன்ற அம்சங்களை மட்டுமே ஆய்வு செய்ய முடிகிறது.

ஆனால், அங்கு உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை உறுதியாகக் கூறுவது இன்னும் சாத்தியமாகவில்லை.

எனினும், இந்தத் தரவுகளின் அடிப்படையில், ஒரு கிரகம் உயிர்கள் வாழத் தகுதியுள்ளதா என்பதை நுணுக்கமாகக் கணிக்க முடிகிறது. ஒரு கிரகத்தை, உயிர்கள் வாழத் தகுந்ததாக மற்றக் கூடிய காரணிகள் சிலவற்றையும், இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது கணிக்கப்பட்ட, உயிர்கள் வாழத்தகுந்த கிரகங்களில் சிலவற்றையும் இந்தப் பதிவில் நாம் விரிவாகக் காண்போம்.

ஒரு கிரகத்தை உயிர்கள் வாழத் தகுந்ததாக மாற்றுவது எது?

ஒரு கிரகம், உயிர்கள் வாழத் தகுதியுடையாதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, சில முக்கிய காரணிகள் உள்ளன:

  • நட்சத்திரத்திற்கும் கிரகத்திற்கும் இடையிலான தொலைவு: ஒரு கிரகம், திரவ நிலையிலான நீரைக் கொண்டிருக்க வேண்டுமெனில், அது, அதன் நட்சத்திரத்திற்குப் பொருத்தமான தூரத்தில் இருக்க வேண்டும். இந்தப் பகுதியே "உயிர்கள் வாழத் தகுந்த பகுதி" (habitable zone) அல்லது "கோல்டிலாக்ஸ் மண்டலம்" (Goldilocks Zone) என்று அழைக்கப்படுகிறது.

  • வளிமண்டலம்: ஒரு கிரகத்தின் வளிமண்டலம், அதற்கான வெப்பநிலையைச் சரியாக பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், புறவெளியிலிருந்து வரும் தீவிரமான கதிர்வீச்சுகளிலிருந்து அந்தக் கிரகத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

  • நீர் இருப்பு: உயிர்கள் வாழ வேண்டுமெனில், ஒரு கிரகம் கண்டிப்பாக திரவ நிலையிலான நீரைக் கொண்டிருக்க வேண்டும்.

  • நிலையான காலநிலை: வெப்பநிலை மற்றும் வானிலை, நீண்டகாலத்திற்கு நிலையாக இருக்கும் போது, அங்கு உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

சுருக்கமாக, ஒரு கிரகம் உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியானதா என்பதை, அதன் நட்சத்திரத்திற்கான தொலைவு, வளிமண்டலம், நீர் இருப்பு, மற்றும் நிலையான காலநிலை போன்ற அம்சங்கள் தீர்மானிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான அம்சங்களை நிறைவேற்றும் கிரகங்களை தேர்வு செய்து, அவற்றின் தன்மைகளை இங்கு விரிவாகக் காண்போம்.

1) புரோக்சிமா செண்ட்டாரி b:

நமது சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கக்கூடிய நட்சத்திரமான புரோக்சிமா செண்ட்டாரி எனும் நட்சத்திரத்தைச் சுற்றி வரக்கூடிய ஒரு கிரகம் தான் இந்த புரோக்சிமா செண்ட்டாரி b ஆகும். இந்தக் கிரகம், பூமியிலிருந்து சுமார் 4.24 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்தக் கிரகத்தினுடைய சூரியனுக்கும், இந்தக் கிரகத்திற்கும் இடையான தொலைவின் காரணமாகவே இது உயிர்கள் வாழத் தகுந்த ஒரு கிரகமாகக் கருதப்படுகிறது.

2016 ஆம் ஆண்டில், ரேடியல் வேக முறையின் மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கிரகமானது சுமார் 73 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில், அதனுடைய நட்சத்திரத்தைச் சுற்றி வலம் வருகிறது. இது, நமது சூரியனுக்கும் புதன் கிரகத்திற்கும் இடையிலான தூரத்தை விடவும் குறைவாகும்.  இதன் சுற்றுக்காலம் 11.2 பூமி நாட்கள் ஆகும்.

Illustration of a habitable exoplanet located in the habitable zone of a star, featuring rocky terrain, blue oceans, and brown landmasses. The planet's atmosphere suggests a mild climate capable of sustaining liquid water, set against the backdrop of space with its star visible in the distance.

இந்தக் கிரகம், உயிர்கள் வாழத் தகுந்த மண்டலத்தில் (the habitable zone) இருப்பதால், அங்கே, நீரானது திரவ நிலையில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலையும் நீரை திரவ நிலையில் வைத்திருப்பதற்கு ஏற்றவாறே உள்ளது. இதன் நிறை பூமியை விட 1.17 மடங்கு அதிகமாகும். இதனுடைய அளவும் இதன் நிறையும், இந்தக் கிரகத்தை ஒரு பாறைக் கிரகமாகவே (Rocky planet) காட்டுகிறது. எனவே, இந்தக் கிரகம் ஒரு திட நிலையிலான தரைபரப்பினைக் கொண்டிருக்கலாம்.

வாழ்வதற்கான சவால்கள்:

  • இந்தக் கிரகத்திற்கும், இதனுடைய நட்சத்திரத்திற்கும் இடையிலான தொலைவு மிகவும் குறைவாக இருப்பதால், இதன் நட்சத்திரத்திலிருந்து வெளியிடப்படக்கூடிய சில ஆபத்தான கதிர்வீச்சுகள், இந்தக் கிரகத்தினுடைய வளிமண்டலத்தை அழிக்கக்கூடும்.
  • இந்த கிரகத்தினுடைய ஒரு பகுதி மட்டுமே  நட்சத்திரத்தைப் பார்த்தவாறு இருக்கும். மற்றொரு பகுதி எப்பொழுதும் இதன் நட்சத்திரத்திற்கு எதிர்ப்புறமாகவே இருக்கும். இந்த நிகழ்வு "டைடல் லாக்கிங்" என்று அழைக்கப்படும். எனவே, இந்த கிரகத்தின் முன்பகுதி, மிகவும் வெப்பமானதாகவும், பின்பகுதி மிகவும் குளிரானதாகவும் இருக்கும். மேலும் முன்பக்கம் ஒளியும், பின்பக்கம் இருளும் சூழ்ந்திருக்கும். 
எனினும், இந்தக் கிரகத்தின் வெப்பமும் குளிரும் (அல்லது) ஒளியும் இருளும் சந்திக்கும் பகுதியில், 'The Terminator Line' என அழைக்கப்படும் மண்டலத்தில், வெப்பநிலை சமநிலைப்படுத்தப்பட்டிருப்பதால், அங்கு உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். 

2) TRAPPIST-1 நட்சத்திர அமைப்பு:

 2016 ஆம் ஆண்டில் TRAPPIST குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட, பூமியின் அளவில் உள்ள ஏழு கிரகங்களைத் தன்னுள் கொண்டுள்ள ஒரு நட்சத்திர அமைப்பே இந்த TRAPPIST-1 நட்சத்திர அமைப்பாகும். இந்த அமைப்பு, நமது பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள "கும்பம்" விண்மீன் குழாமில் உள்ளது. இந்த அமைப்பின் மத்தியில் இருக்கக்கூடிய TRAPPIST-1 எனும் நட்சத்திரத்தைச் சுற்றி, கிட்டத்தட்ட பூமியின் அளவிலேயே இருக்கக்கூடிய ஏழு கிரகங்கள் வலம் வருகின்றன. 

இந்த நட்சத்திரம் "Ultracool Dwarf star" வகையைச் சேர்ந்தது. இதன் நிறை சூரியனின் விரையில் 9% மட்டுமே கொண்டுள்ளது. இதன் வெப்பநிலை சுமார் 2500K என்ற அளவில் உள்ளது(சூரியனை விட மிகக் குறைவு). இதனைச் சுற்றி வரக்கூடிய அனைத்து கிரகங்களும் பூமியின் அளவிற்கு கிட்டத்தட்ட சமமாகவே உள்ளன. இவற்றின் ஆரம் பூமியின் ஆரத்தை விட 0.76 முதல் 1.13 மடங்கு எனும் அளவிலேயே மாறுபடுகிறது. இந்தக் கிரகங்கள் அனைத்தும் குறுகிய கால அளவிற்குள் அவற்றின் நட்சத்திரத்தைச் சுற்றி வந்து விடுகின்றன. முதலாவதாக இருக்கக்கூடிய TRAPPIST-1b எனும் கிரகம் சுமார் 1.5 நாட்களிலும், கடைசியாக இருக்கக்கூடிய TRAPPIST-1h எனும் கிரகம், சுமார் 19 நாட்களிலும், அவற்றின் நட்சத்திரத்தைச் சுற்றி வந்து விடுகின்றன.

இந்த ஏழு கிரகங்களில், மூன்று கிரகங்கள் (TRAPPIST-1e, TRAPPIST-1f, TRAPPIST-1g) உயிர்கள் வாழத் தகுந்த மண்டலத்தில் உள்ளன. எனவே, இந்த மூன்று கிரகங்களிலும் நீரானது திரவ நிலையில் இருக்க வாய்ப்புள்ளது. இந்தக் கிரகங்களும் புரோக்சிமா செண்ட்டாரி b கிரகத்தைப் போலவே, தனது ஒரு பக்கத்தை மட்டுமே நட்சத்திரத்தை நோக்கியவாறு வைத்துள்ளன. எனவே, இந்த மூன்று கிரகங்களிலும், ஒளியும், இருளும் சந்திக்கக்கூடிய The Terminator Line எனும் பகுதியே, உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் போன்ற விண்வெளித் தொலைநோக்கிகளுக்கு இந்த TRAPPIST 1  நட்சத்திர அமைப்பு ஒரு சிறந்த இலக்காகக் கருதப்படுகிறது. ஒருவேளை, நம்மால் இந்த நட்சத்திர அமைப்பை, நமது சூரியக்குடும்பத்தின் மையத்தில் வைக்க முடிந்தால், இந்த ஒட்டுமொத்த நட்சத்திர அமைப்பும் புதன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் அடங்கிவிடும்.

3) LHS 1140-b:

2017 ஆம் ஆண்டில் "MEarth project" எனும் திட்டத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட, LHS 1140 எனும் நட்சத்திரத்தைச் சுற்றி வரக்கூடிய ஒரு கிரகம் தான் இந்த LHS 1140-b ஆகும். இந்தக் கிரகம், பூமியிலிருந்து சுமார் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கக்கூடிய, திமிங்கல விண்மீன் குழாமில் (cetus constellation) அமைந்துள்ளது.

"Super Earth" என்று அழைக்கப்படும் இந்தக் கிரகத்தின் ஆரமானது, பூமியை விட 1.6 மடங்கு பெரியதாகும். மேலும், இதன் நிறை, பூமியின் நிறையை விட 6.98 மடங்கு அதிகமாகும். சுமார் 24.7 நாட்களில் இந்த கிரகம் இதன் நட்சத்திரத்தைச் சுற்றி வந்து விடுகிறது. இந்த கிரகமும் இதன் நட்சத்திரத்தினுடைய உயிர்கள் வாழத் தகுந்த மண்டலத்தில் உள்ளது. எனவே எங்கும் நீர் திரவ நிலையில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்தக் கிரகம் ஒரு பாறைக் கிரகமாகவும், இரும்பு மையத்தைக் கொண்டதாகவும் உள்ளது. பூமிக்கு கிடைக்க கூடிய சூரிய ஒளியில் பாதி மட்டுமே இந்த கிரகத்திற்கு கிடைக்கிறது. எனினும், தடிமனான காற்று மண்டலத்தைக் கொண்டிருந்தால், உயிர்கள் வாழ ஏற்ற வெப்பநிலைகளை, இதனால் பராமரிக்க முடியும். 

இந்த கிரகத்தினுடைய நட்சத்திரமான LHS 1140 என்பது, சூரியனை விடக் குறைந்த வெப்பநிலை மற்றும் ஒளிர்வைக் கொண்டுள்ள ஒரு "சிகப்பு குள்ள நட்சத்திரம்" ஆகும். இந்த வகை நட்சத்திரங்கள் மிகவும் நீண்ட ஆயுள் கொண்டவை. எனவே இந்த வகையிலான நட்சத்திரங்கள், இவற்றின் கிரகங்களுக்கு, பல பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிலையான சூழ்நிலையை வழங்கலாம். எனினும் இந்த நட்சத்திரங்கள் பெரிய அளவிலான கதிர்வீச்சுகளை வெளியிடுவதால், இவற்றை சுற்றி வரக்கூடிய கிரகங்களின் காற்று மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும். 

ஒருவேளை இந்தக் கிரகம், வளிமண்டலத்தைக் கொண்டிருந்தால், அதில் கார்பன் டை ஆக்சைடு அல்லது தண்ணீரின் நீராவி போன்ற, உயிர் வாழ்விற்கு முக்கியத்துவமான வாயுக்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிரகத்தைச் சுற்றியுள்ள காற்றுமண்டலத்தைக் கண்டறியவும், உயிரின் அடையாளங்களைக் காணவும் சில முன்னணி விண்வெளித் தொலைநோக்கிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன.

4) K2-18 b:

2015 ஆம் ஆண்டில் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட, K2-18 எனும் நட்சத்திரத்தைச் சுற்றி வரக்கூடிய இந்த கிரகமானது, சுமார் 124 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கக்கூடிய சிம்மம் நட்சத்திரக் குழாமில் அமைந்துள்ளது. இந்த கிரகம், இதன் நட்சத்திரத்தினுடைய உயிர்கள் வாழத் தகுந்த மண்டலத்தில் இருப்பதால் எங்கும் நீரானது திரவ நிலையில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த கிரகம் இதனுடைய நட்சத்திரத்தினைச் சுற்றி வருவதற்கு 33 நாட்களை எடுத்துக் கொள்கிறது. இதன் அடர்த்தியான வளிமண்டலம், நீர் இருப்பதற்கான வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. இதன் நிறை, பூமியின் நிறையை விட 8.6 மடங்கு பெரியதாகும். 

இதன் நட்சத்திரமான  K2-18 என்பது ஒரு சிகப்பு குள்ள நட்சத்திரம் ஆகும். எனவே, இந்த நட்சத்திரம், இதனுடைய கிரகத்திற்கு ஒரு நீண்ட கால நிலையான சூழ்நிலையை வழங்குகிறது. 2019 ஆம் ஆண்டில் இந்த கிரகத்தினுடைய வளிமண்டலத்தில, நீராவி இருப்பாது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்திய ஆய்வுகளில் இந்த கிரகத்தில், மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

உயிர் வாழ்விற்கான சவால்கள்: 

  • இந்த கிரகத்தினுடைய அளவின், காரணமாக இதன் மேற்பரப்பு அழுத்தம், பூமியை விட  மிகவும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  • இந்த கிரகத்தில் ஹைட்ரஜன் வாயுவானது பெருமளவில் நிறைந்துள்ளது. எனவே, இதன் வளிமண்டலம் பூமியின் வளிமண்டலத்திலிருந்து பெருமளவில் வேறுபட்டு இருக்கலாம். 
 2023 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கிலிருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில், இந்த கிரகத்தின் வளிமண்டலத்திற்குக் கீழே, ஒரு பெருங்கடல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

5) கெப்லர்-22 b:

 2011 ஆம் ஆண்டில் நாசாவின் கெப்லர் விண்கலம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கிரகமானது, பூமியிலிருந்து சுமார் 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, சிக்னஸ் (Cygnus) நட்சத்திர குழாமில் அமைந்துள்ளது. இந்த கிரகமும் புவியுடைமை மண்டலத்தில் (Habitable Zone) அமைந்துள்ள காரணத்தினால், நீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் நட்சத்திரம், நமது சூரியனைப் போலவே ஒரு, G-வகை நட்சத்திரம் ஆகும்.
 
இந்தக் கிரகத்தின் ஆரம், பூமியின் ஆரத்தை விட 2.4 மடங்கு பெரியதாகும். இதன் நிறையைப் பற்றிய தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை. எனினும் இதன் ஆரத்தினைப் பொறுத்து, பூமியை விட அதிகமான நிறையுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கிரகம் ஒருவேளை ஒரு பாறைக் கிரகமாக இருந்தால், இதன் ஈர்ப்புவிசை, பூமியின் ஈர்ப்புவிசையை விட பலமானதாக இருக்கும்.

இந்த கிரகம், இதன் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதற்கு, சுமார் 290 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இது, பூமியில் ஒரு ஆண்டுடன்  ஒப்பிடத்தக்கதாகும். இதன் சராசரி வெப்பநிலை, சுமார் 22°C என்று கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் சராசரி வெப்பநிலை 15°C ஆகும். இதன் வளிமண்டலத்தைப் பற்றிய தரவுகள் இதுவரையில் கிடைக்கவில்லை. இதன் வளிமண்டலமும் மேற்பரப்பின் தன்மையும், தெரியும்பொழுது மட்டுமே, இங்கு நீரானது திரவ நிலையில் உள்ளதா இல்லையா என்பதனைத் தீர்மானிக்க முடியும்.

முடிவுரை: 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்கள், உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான நீர் இருப்பு, வளிமண்டலத்தின் இயல்பு, மற்றும் வெப்பநிலை போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, இதுவரை உயிரினங்கள் வாழத் தகுந்த கிரகங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், அங்கு உயிர்கள் வாழும் சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.

இந்த ஆராய்ச்சிகள் வழியாகவே, நாம் பிரபஞ்சத்தில் தனியாகத்தான் இருக்கிறோமா, அல்லது வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்கின்றனவா என்ற கேள்விக்கு பதில் காண முடியும்.

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post