கடலின் அடிபரப்பானது, சில கடல்படிவுகளால் சூழப்பட்டுள்ளது. இந்தப் படிவுகள் அனைத்தும் சில பாறைத் துகள்கள் மற்றும் உயிரியல் பொருட்களால் உருவானவை. இந்த அடுக்குகள் அனைத்தும், பூமியில் நிகழும் புவியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களைத் தன்னுள் பதிவு செய்து வைத்துள்ளன.
இங்கு இருக்கக்கூடிய நுண்ணுயிர் எச்சங்கள் மற்றும் கனிமங்கள், பல லட்சம் வருடங்களுக்கு முன்பு, பூமியில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களைக் கணிக்க உதவுகின்றன. ஆழ்கடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் மற்றும் குளிரின் காரணமாக, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல்வாழ் உயிரினங்களின் உடல்கள், சிதைவடையாமல் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
ஆழ்கடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கக்கூடிய பகுதிகளில், இறந்த உயிரினங்களின் திசுக்கள் கூட, சிதைவடையாமல் பாதுகாக்கப்படுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் விபத்துகளின் காரணமாக, கடலுக்குள் மூழ்கிய கப்பல்கள் மற்றும் வேறு சில பொருட்கள், கடலின் அடியில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்வதன் மூலமாக அக்கால மக்களின் வாழ்க்கை முறைகள், தொழில்நுட்பங்கள், கலாச்சாரம், போன்றவற்றை ஊகிக்க முடியும். 1901 ஆம் ஆண்டில், பழங்கால கிரேக்கர்களால் பயன்படுத்தப்பட்ட Antikythera எனும் கணிப்புக் கருவி, கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கருவி, வானில் கிரகங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கவும் கிரேக்கர்களுக்கு உதவியது. கடலின் சில பகுதிகள் பல மில்லியன் ஆண்டுகளாக மாற்றமின்றி இருப்பதால், அங்கிருந்த பல்வேறு உயிரினங்களின் படிமங்களும் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறாக, கடல் ஒரு வரலாற்றுத் தேக்கமாகச் செயல்படுகிறது.
பெர்முடா முக்கோணம்:
பெர்முடா முக்கோணம் என்பது கடலின், மிகவும் மர்மமான இடங்களில் ஒன்றாகும். இது, வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
 |
image: flickr
|
1945 ஆம் ஆண்டில், ஐந்து அமெரிக்க கப்பற்படை குண்டு வீச்சாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது, இந்த பெர்முடா முக்கோணத்தின் வழியாக பயிற்சிக்காக சென்றபோது, காணாமல் போனது. இவர்களை தேடச் சென்ற மீட்பு விமானமும் காணாமல் போனது. அதேபோல், 1918 ஆம் ஆண்டில் கரீபியன் தீவில் உள்ள பார்படோஸ் நாட்டிலிருந்து அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் எனும் நகதிரத்திற்கு இந்த பெர்முடா முக்கோணத்தின் வழியாகச் சென்ற ஒரு பெரிய கப்பல், 300 பேருடன் மாயமாகிவிட்டது. இதே கப்பல் 1872 ஆம் ஆண்டில், பெர்முடா முக்கோணத்திற்கு அருகில் மனித நடமாட்டம் இல்லாமல் தனியாக மிதந்து கொண்டு இருந்தது.
இந்த நிகழ்வுகளுக்கான சில அறிவியல் ரீதியான காரணங்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு.
- கடலுக்கு அடியில் நிகழும் மீத்தேன் வாயு வெடிப்புகளினால், கடல் நீரின் அடர்த்தி குறைவதால், கப்பல்கள் மூழ்க வாய்ப்புள்ளன.
- திடீரென்று உருவாக்கக்கூடிய மிகப்பெரிய அலைகள் இந்தப் பகுதியில் காணப்படுவதால், இவற்றாலும் கூட கப்பல்கள் மூழ்கியிருக்கலாம்.
சிலர், இந்த பெர்முடா முக்கோணம் சபிக்கப்பட்டிருப்பதாகவும், நீரில் மூழ்கிய அட்லாண்டிஸ் போன்ற புராண நகரங்களுடன் தொடர்புடையதாகவும் நம்புகின்றனர். அமெரிக்க கடலோர காவல்துறை மற்றும் NOAA போன்ற அமைப்புகள், இந்தப் பகுதியில் எந்தவித அபாயமும் இல்லை என்று கூறுகின்றன.
ஆழ்கடல் நீர்வீழ்ச்சிகள்:
எண்ணெய்யும், நீரும், ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஏனெனில், எண்ணெய்க்கும் நீருக்கும் அடர்த்தியில் பெருமளவு வேறுபாடு உள்ளது. அதேபோல், வெப்பநிலை மற்றும் அழுத்தம் மாறுபடும் பொழுது, நீரினுடைய அடர்த்தியும் மாறுபடுகிறது. இதனால்தான் கடலுக்குள்ளே ஆழ்கடல் நீர்வீழ்ச்சிகள் உருவாகின்றன.
குளிர்ந்த மற்றும் கனமான நீரானது, சூடான மற்றும் இலகுவான நீருக்குக் கீழே செல்லும் பொழுது, நீர்வீழ்ச்சியைப் போல் தோற்றமளிக்கிறது. இது, பொதுவாக ஆழ்கடலில் உள்ள மலைப் பகுதிகள் மற்றும் ஆழ்கடல் தீவுகளில் ஏற்படுகிறது. கடலின் மேல் பகுதியில் உள்ள வெப்பம், ஆழ்கடலில் உள்ள வெப்பத்தை விட அதிகமாக இருப்பதாலும், கடலின் மேல் பகுதியில் உள்ள அழுத்தம், ஆழ்கடலில் உள்ள அழுத்தத்தை விட குறைவாக இருப்பதாலும், மேல் பகுதியில் உள்ள நீரின் அடர்த்தி ஆழ்கடலில் உள்ள நீரின் அடர்த்தியை விடக் குறைவாக உள்ளது. இந்த அதிகமான அடர்த்தியுடைய நீரானது, கடலின் அடியில் உள்ள மலைப் பகுதிகளின் சரிவுகளின் வழியாகச் செல்லும் பொழுது, நீர்வீழ்ச்சி போல தோற்றமளிக்கிறது.
டென்மார்க் ஆழ்கடல் நீர்வீழ்ச்சி:
கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த ஆழ்கடல் நீர்வீழ்ச்சியானது, உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் நீர்வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஆர்க்டிக் கடலின் குளிர்ந்த நீரானது அத்லாண்டிக் கடலின் சூடான நீருக்குக் கீழே மூழ்குவதால், இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் ஒவ்வொரு வினாடிக்கும் 35 லட்சம் சதுர மீட்டர் அளவிலான நீர் சரிகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம், சுமார் 11,500 அடி ஆகும். இது, உலகின் மிகவும் உயரமான, நிலத்தில் உள்ள நீர்வீழ்ச்சியான, "ஏஞ்சல்" நீர்வீழ்ச்சியை விட மிகவும் பெரியதாகும்.
இந்த ஆழ்கடல் நீர்வீழ்ச்சிகள், பூமியின் காலநிலையையும் சமநிலைப்படுத்த உதவுகின்றன.
ஒளிரும் கடல்கள்:
உயிரொளிர்வு (bioluminescence) எனும் நிகழ்வினால் ஒளிரக்கூடிய கடல்கள், உலகின் அழகிய அற்புதங்களில் ஒன்றாகும். இந்த ஒளிர்வு, சில கடல்வாழ் நுண்ணுயிர்களில் நிகழும், வேதிவினைகளினால் ஏற்படுகிறது. இந்த "உயிரொளிர்வு" என்னும் நிகழ்விற்கு முக்கிய காரணமாக கருதப்படும் உயிரினம், டைனோஃப்ளாஜெலேட்டுகள் (Dinoflagellates) எனும் ஒற்றைச் செல் தாவர வகை ஆகும். இயக்கத்தால் தொந்தரவு செய்யப்படும்போது, இந்த உயிரினங்கள், நீலம் அல்லது பச்சை நிற ஒளியை உமிழ்கின்றன.
மேலும், சில வகையான கணவாய் மீன்களும், ஜெல்லி மீன்களும் கூட, இந்த உயிர் ஒளிர்வினை ஏற்படுத்துகின்றன. ஆனால் ஏன்?
இதுபோன்ற ஒளியை உயிரினங்கள் ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கியமான காரணம் தற்காப்பபே ஆகும். திடீரென்று வெளிச்சத்தை ஏற்படுத்துவதன் மூலமாக, தங்களை வேட்டையாட வரக்கூடிய உயிரினங்களை இவை பயமுறுத்துகின்றன. சில உயிரினங்கள், தகவல் பரிமாற்றத்திற்காகவும் இந்த ஒளிர்வினைப் பயன்படுத்துகின்றன. கடற்கரையின் அருகிலுள்ள அலைகளின் இயக்கத்தால், இவற்றின் ஒளி உமிழும் தன்மை தூண்டப்படுவதால், அந்த பகுதிகளில் அலைகள் ஒளிர்வது போல் தோற்றமளிக்கிறது. இது, கடலின் மேல் பகுதியை பிரகாசமாக மாற்றுகிறது.