ஆழ் அண்டத்தை நோக்கிய ஒரு பயணம்-(THE VOYAGER SPACECRAFTS)

Image: PICRYL 

1966 ஆம் ஆண்டில் Gary arnold flandro எனும், அமெரிக்காவைச் சேர்ந்த, ஒரு விண்வெளிப் பொறியியலாளர், இன்னும் 11 வருடங்கள் கழித்து 1977 ஆம் ஆண்டில், சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும், ஒரே நேர்கோட்டில் வரப்போவதைக் கண்டுபிடித்தார். இந்த நிகழ்வு 175 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். 

இந்த நேரத்தில், ஒரு விண்கலத்தை விண்வெளியில் செலுத்தினால், குறைவான நேரத்தில் அனைத்து கோள்களையும் ஆராய்ந்து விட முடியும். மேலும், இதற்கான எரிபொருளும் குறைவான அளவிலேயே தேவைப்படும் என்பதை உணர்ந்த அவர், அந்த நேரத்தில் ஒரு விண்கலத்தை அனுப்புமாறு நாசாவிற்கு மனு அளித்தார். ஆனால் இதற்கான நிதி ஒதுக்கப்படுவதற்கு, ஆறு ஆண்டுகள் ஆனது. பிறகு 1972 ஆம் ஆண்டில், இரண்டு விண்கலங்கள் கட்டமைக்கப்படத் தொடங்கின. 

ஐந்து ஆண்டுகள் கழித்து, 1977 ஆம் ஆண்டில் வொயேஜர்-1 மற்றும் வொயேஜர்-2 இன்னும் இரண்டு விண்கலங்கள் கட்டமைக்கப்பட்டன. இவை இரண்டும், கட்டமைப்பிலும் அளவிலும் ஒரே மாதிரியாகவே இருந்தன. இவற்றின் எடை கூட சமமாகத் தான் இருந்தன.

இந்த இரண்டு விண்கலங்களிலும், spectrometer, magnetometer, plasma detectors, முதலான 11 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனுடைய Magnetometer, எனும் கருவியானது, இந்த விண்கலத்திலிருந்து சிறிது தூரம் முன்னோக்கி நீட்டிக்கொண்டிருக்கும். இதனுடைய வேலை, மற்ற கிரகங்களினுடைய காந்தப்புலத்தை அளவிடுவதே. இந்த விண்கலத்தில் உள்ள சில எலக்ட்ரானிக் சாதனங்களிலிருந்து, வெளியேறும் காந்தப்புலத்தினால், அந்த magnetometer, பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே, அது, கொஞ்சம் நீட்டிக் கொண்டிருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

Image: wikimedia commons 

இதில் உள்ள மற்றொரு முக்கியமான பொருள், The golden disc  எனும், ஒரு தங்கத் தகடாகும். ஒருவேளை இந்த விண்கலம், ஏதேனும் வேற்று கிரகவாசிகளிடம் சிக்கினால், அவர்களுக்கு நாம் இருக்கும் இடத்தைத் தெரியப்படுத்துவதற்காகவே இந்த அமைப்பு அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தத் தகட்டில், எந்த ஒரு எண்களையும், எந்த ஒரு மொழியைச் சேர்ந்த எழுத்துக்களையும் பயன்படுத்தாமலேயே, வெறும் ஓவியங்களையும், சில குறியீடுகளையும் மட்டுமே வைத்தே, சில தகவல்களைச் சேர்த்திருக்கிறார்கள்! விண்வெளியில் நம் பூமி இருக்கக்கூடிய இருப்பிடம், ஹைட்ரஜன் அணுவின் படம், அந்தத் தகட்டினை பயன்படுத்தி அதில் சேமிக்கப்பட்டுள்ள, ஒலியினைக் கேட்பதற்கான முறை, போன்ற தகவல்கள் இந்த தகட்டின் மேற்பரப்பில் இடம்பெற்றுள்ளன. 

Image: wikimedia commons 

ஒருவேளை இந்தத் தகட்டிலிருந்து ஒலியினைக் கேட்கும் முறையை வேற்றுகிரக வாசிகள் தெரிந்து கொண்டால், அவர்கள், கிட்டத்தட்ட 95 நிமிடங்கள் ஓடக்கூடிய பாடல்களைக் கேட்பார்கள். அவற்றில் பெரும்பாலானவை மேற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த இசையாகவே இருக்கும். பூமியில் உள்ள, 55 மொழிகளில் அவர்களுக்கு வணக்கம் கூறப்பட்டிருக்கும். பூமியில் உள்ள விலங்குகள், காற்று, நீர், பறவைகள் போன்றவற்றின் ஒலியையும் அவர்கள் கேட்பார்கள். இந்த 55 மொழிகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்தி, தெலுங்கு முதலான மொழிகளும் இடம் பெற்றுள்ளன. ஆனால், உலகின் தற்போதைய  மூத்த மொழியான தமிழ் இல்லை! 

இந்த இரண்டு விண்கலங்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காகவே விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. வொயேஜர்-1 விண்கலத்தின் முதன்மை நோக்கமானது, வியாழன், சனி போன்ற இரண்டு கோள்களை மட்டும் ஆய்வு செய்துவிட்டு, சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறுவது ஆகும். 

வொயேஜர்-2 எனும் விண்கலத்தின் முதன்மை நோக்கம், வியாழன், சனி,  யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ போன்ற கிரகங்களையும் அவற்றின் நிலவுகளையும் ஆய்வு செய்த பிறகே, சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறுவது ஆகும். 

1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் நாளில் வொயேஜர்-2 விண்கலம் முதலில், விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அடுத்ததாக செப்டம்பர் 1 ஆம் நாளில் வொயேஜர்-1 விண்கலமும் அனுப்பப்பட்டது.

எனினும் இரண்டாவதாக அனுப்பப்பட்ட வொயேஜர்-1 எனும் விண்கலமே, வியாழன் கிரகத்தை முதலில் அடைந்தது. மேலும், வியாழன் கிரகத்திற்கும் ஒரு சிறிய வளைய அமைப்பு இருப்பதை இந்த விண்கலம் உறுதிப்படுத்தியது! பிறகு, அதன் சில நிலவுகளான Ganymede, Callisto, Io, and Europa போன்றவற்றையும் ஆய்வு செய்தது. அடுத்ததாக இந்த விண்கலம் சனி கிரகத்தை நோக்கிய பயணத்தை தொடர்ந்தது. 

சனி கிரகத்தை நெருங்கும் போது, முதன் முதலில், சனி கிரகத்தின் ஒரு மங்கலான புகைப்படத்தை, அந்த கிரகத்தின் அருகிலிருந்து எடுத்து அனுப்பியது. 

Image: PICRYL 

பிறகு, இந்தக் கிரகத்தினுடைய சில நிலவுகளை ஆய்வு செய்து, சில புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியது. 

இந்த ஆய்வுகளை எல்லாம் முடித்த பிறகு, இந்த விண்கலம், interstellar space எனும் ஆழ் அண்டத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. இந்தப் பகுதியில், சூரியனுடைய ஈர்ப்பு விசையின் தாக்கம்  இருக்காது. 

இந்தப் பக்கத்தில், வொயேஜர்-2 விண்கலமும் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ, போன்ற கிரகங்களையும் அவற்றின் நிலவுகளையும் ஆய்வு செய்து, அவற்றின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பிய பிறகு, இதுவும், ஆழ் அண்டத்தை நோக்கிய பயணத்தை தொடங்கியது. இந்த விண்கலம், சனி கிரகத்தை அடையும்போது இதில் சில பழுதுகள் ஏற்பட்டன. ஆனால், அதையும் நமது விஞ்ஞானிகள் பூமியிலிருந்தே சரி செய்து விட்டனர்.

இந்த இரண்டு விண்கலங்களிலும், சூரியப் பலகைகள் (solar boards)  பயன்படுத்தப்படவில்லை. இதற்கான காரணத்தை வாசகர்களே ஒருவாறு புரிந்து கொள்ளலாம். இதற்கான காரணம், சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே செல்லச் செல்ல, சூரிய ஒளியினுடைய ஒளிர்வுத்தன்மை குறைவாக இருப்பதால், இந்த விண்கலங்களால் ஆற்றலை உருவாக்க முடியாது. 

அதற்குப் பதிலாக Radioisotope thermoelectric generator (RTG) எனும் மின்கலம் போன்ற ஒரு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த சாதனத்தின் உள்ளே யுரேனியம் 238 எனும் கதிரியக்கத் தன்மை கொண்ட ஒரு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பொருள் ஒரு மூடப்பட்ட கொள்கலனில் (closed container) வைக்கப்பட்டுள்ளதால், இதிலிருந்து  வெளியேற்றப்படக்கூடிய கதிர்வீச்சுகள் அந்தக் கொள்கலனின் உள்ளேயே மோதிக் கொண்டு, இயக்கத்தில் இருந்து கொண்டே இருக்கும். இந்த இயக்க ஆற்றலை மின்னாற்றலாக மாற்றித் தருவதே இந்த RTG எனும் சாதனத்தின் பணியாகும். இவ்வாறாகவே, இந்த இரண்டு விண்கலங்களும் ஆற்றலை பெறுகின்றன. இந்த யுரேனியம் 238 எனும் கதிரியக்கப் பொருளினுடைய கதிரியக்கத் தன்மை குறையும் போது, அதிலிருந்து உருவாக்கப்படக்கூடிய மின் ஆற்றலின் அளவும் குறையும். 

வொயேஜர்-1 விண்கலம், 2012 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25ஆம் நாளில் சூரியக் குடும்பத்தைத் தாண்டி, ஆழ் அண்டத்திற்குள் சென்றது. பிறகு ஆறு வருடங்கள் கழித்து, 2018 ஆம் ஆண்டில் வொயேஜர்-2 விண்கலமும் ஆழ் அண்டத்திற்குள் நுழைந்தது. 

 Path of voyager 1 and 2

இப்போது, இந்த இரண்டு விண்கலங்களும் விண்ணுக்கு அனுப்பப்பட்டு 47 வருடங்களுக்கு மேல் ஆகின்றன! ஆனால் நமது விஞ்ஞானிகள் இந்த இரண்டு விண்கலங்களும் 8 முதல் 15 வருடங்கள் மட்டுமே வேலை செய்யும் என்றே, கணித்திருந்தனர். இப்பொழுது கூட இந்த இரண்டு விண்கலங்களும் பூமியோடு, தொடர்பில் தான் உள்ளன. 

தற்போது, வொயேஜர்-2 விண்கலத்தின் அலைவாங்கி (antenna) எனும் அமைப்பானது பூமியிலிருந்து 2° விலகி விட்டதால், இது அனுப்பக்கூடிய தகவல்களை நம்மால் தற்போதைக்கு பெற முடியவில்லை! ஆனால், இதுபோன்று பலமுறை நிகழ்ந்துள்ளதால், இந்தப் பிரச்சனை எளிதில் சரியாகிவிடும் என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த இரண்டு விண்கலங்களும், அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்து விட்டதாலும், இவற்றினுடைய மின்கலங்களில் உள்ள ஆற்றல் குறைந்து கொண்டே வருவதாலும், அவற்றில் சில கருவிகளை நமது விஞ்ஞானிகள் முடக்கியுள்ளனர். இப்போது இந்த இரண்டு விண்கலங்களிலும் நான்கு கருவிகள் மட்டுமே, செயல்பாட்டில் உள்ளன. இவற்றினுடைய கேமராக்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன!

இப்போது வொயேஜர் 1 விண்கலம் பூமியிலிருந்து, 24,500 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் 17km/s என்னும் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வொயேஜர் 2 விண்கலம் 20,000 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், 15km/s என்னும் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. 

வொயேஜர் 1 விண்கலம்  இப்போது சென்று கொண்டிருக்கும் திசையிலேயே தொடர்ந்து சென்று கொண்டிருந்தால், இன்னும் 38,200 வருடங்களில் Ophiuchus எனும், நட்சத்திரக் கூட்டத்தை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இதேபோல், வொயேஜர் 2 விண்கலம், தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருந்தால் இன்னும் 40,000 வருடங்களில், Ross 248 எனும் நட்சத்திரத்தை நெருங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் இந்த விண்கலம், அந்த நட்சத்திரத்திலிருந்து, 1.7 ஒளிஆண்டுகள் தொலைவிலேயே இருக்கும்!

ஆனால், இவற்றினுடைய, மின்கலங்கள் 2036 ஆம் வருடம் வரையில்தான் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு இந்த இரண்டு விண்கலங்களும் ஒரு சாதாரண பொருள் போலவே விண்வெளியில் அலைந்து கொண்டிருக்கும். ஆனால், இந்த இரண்டு விண்கலங்களிலும் Golden disc எனும் தங்கத்தகடு, நம்மைப் பற்றிய தகவல்களைத் தாங்கிச் சென்று கொண்டிருப்பதை மறந்து விடக்கூடாது. 

எதிர்காலத்தில் வேற்று கிரகவாசிகள் இந்த விண்கலங்களைக் கண்டுபிடித்தால், அவர்கள் நம் பூமியை தேடிக் கொண்டு வருவதற்கும் வாய்ப்புள்ளது!

 40 வருடங்களுக்கு முந்தைய ஒரு பழைய தொழில்நுட்பம் இன்று வரையில் விஞ்ஞானிகளுடன் தொடர்பில் இருப்பது ஆச்சரியமே!

வொயேஜர் 1 விண்கலம், சூரியக் குடும்பத்தை விட்டுச் செல்வதற்கு முன்பாக, கடைசியாக நமது சூரிய குடும்பத்தை ஒரு குடும்ப புகைப்படம் எடுத்தது. 

Image: wikimedia commoms 

அமெரிக்க வானியலாளரும், Golden disc எனும் தங்கத்தகட்டினுடைய உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவருமான, Carl segan அவர்கள் இந்தப் புகைப்படத்தில், பூமி இருக்கும் பகுதியான the pale blue dot எனும் பகுதியினைப் பற்றி, நமது ஆணவத்தை உடைக்கும் படியாக, வர்ணித்து எழுதினார். அவரின் வருணனை, கீழுள்ளவாறு....

The pale blue dot 
Image: flickr

அதோ, அந்தப் புள்ளியைப் பாருங்கள். அதுதான் நமது வீடு! நீங்கள் விரும்பக்கூடிய, உங்களுக்கு தெரிந்த அனைவரும் உள்ள வீடு. நமது இன்ப துன்பங்களின் இருப்பிடம்! ஒவ்வொரு, வீரனும், கோழையும், ஒவ்வொரு நாகரீகத்தை உருவாக்குபவனும், அழிப்பவனும், ராஜாக்களும், விவசாயிகளும், ஒவ்வொரு இளம் தம்பதியும், சிறு மழலைகளும், அறிவியலாளர்களும், ஊழல் அரசியல்வாதிகளும், ஒவ்வொரு தலைவர்களும், துறவிகளும், பல பாவங்களைச் செய்தவரும், இந்த உலகை ஆளத் துடிப்பவர்களும், தங்கியிருக்கக்கூடிய இருப்பிடம் இந்த சிறு புள்ளிதான்.
-carl segan 


Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post