![]() |
Image: pixabay |
அறிவியலின் வளர்ச்சி, ஒருவருக்குப் பயனுள்ளதா? அல்லது ஆபத்தானதா? என்பது, அதனைப் பயன்படுத்துபவரின் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது. இதற்கு ஒரு உதாரணமாக, நாம் பயன்படுத்தும் கைப்பேசியைக் கூறலாம். இது, மக்களுக்குப் பெரிய அளவில் பயனுள்ளதாகவே உள்ளது. ஆனால் அதனைத் தவறாகவோ, அல்லது அதிகமாகவோ பயன்படுத்தினால், சில ஆபத்துங்களும் ஏற்படக் கூடும். அதே போல், அணு ஆற்றலானது, அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை உருவாக்கவும் பயன்படுகிறது, மின்சாரம் தயாரித்தல், போன்ற பயனுள்ள செயல்களுக்கும் பயன்படுகிறது.
அறிவியல் ஒரு ஆயுதம். அதனை, அழிவிற்கும் பயன்படுத்த முடியும், ஆக்கத்திற்கும் பயன்படுத்த முடியும்.
இன்றைய காலகட்டத்தில் இந்த அறிவியலானது, செயற்கையாக மழையையே உருவாக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதற்கான ஆராய்ச்சிகள் 1940 ஆம் ஆண்டுகளிலிருந்தே தொடங்கிவிட்டன.
அமெரிக்கா, சீனா, மற்றும் அரேபிய நாடுகள் போன்ற பல்வேறு நாடுகள் செயற்கையாக மழையை உருவாக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது துபாயில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் கூட, அவர்கள் செயற்கை மழையை உருவாக்க முயன்றது தான் காரணம் என்று சில ஊடகங்கள் கூறுகின்றன.
இவை எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலாக, சீனா, ஒரு இடத்தில் பெய்யவிருக்கும் மழையைத் தடுத்தே நிறுத்திவிட்டனர். இதற்கான காரணம், சீனாவின் பெய்ஜிங் நகரில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா நாளன்று, மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அந்நாட்டினுடைய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. எனவேதான் சீனா அந்த மழையைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் எப்படி?
இதனைத் தெரிந்து கொள்வதற்கு, முதலில் நாம் செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
ஆறு, கடல், ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் உள்ள நீரானது, வெயிலின் தாக்கத்தால் ஆவியாகி, மேல் நோக்கிச் சென்று மேகங்களுடன் கலக்கிறது. மேகங்களில் உள்ள நீர்த்துளிகளின் அளவு அதிகரிக்கும்போது அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, பெரிய நீர்த்துளிகளாக மாறி, பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக கீழ் நோக்கி வருகின்றன. இந்த நிகழ்வே மழை என அழைக்கப்படுகிறது.
ஆனால் இந்த நீர்த்துளிகளால் தானாகவே ஒன்றுடன் ஒன்று சேர முடியாது. ஏனென்றால் அவை, மிகவும் சிறியவை. அந்த மேகத்தில் இருக்கக்கூடிய சிறுசிறு தூசிகள், மற்றும் பாக்டீரியா போன்றவற்றை பிடிமானமாக வைத்துக் கொண்டுதான் இந்த நீர்த்துளிகள் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. ஒருவேளை அந்த மேகத்தில், நீர்த்துளிகளை ஒன்று சேர்ப்பதற்கான எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் இருந்தால், அந்த மேகத்தில் எவ்வளவு ஈரப்பதம் இருந்தாலும் அதனால் மழைத்துளிகளை உருவாக்க முடியாது.
எனவே, இங்கே மழைத்துளி உருவாவதற்கு அந்த மேகத்தில், சிறு சிறு தூசி போன்ற துகள்கள், பிடிமானமாகத் தேவைப்படுகின்றன. அவற்றை அந்த மேகத்திற்கு நம்மால் கொடுக்க முடிந்தால் நம்மாலும் மழை பொழிய வைக்க முடியும் அல்லவா?
இந்த அடிப்படையில்தான் செயற்கை மழை உருவாக்கப்படுகிறது. இந்த, செயற்கை மழையை உருவாக்குவதற்கு மேகவிதைப்பு(Cloud seeding) எனும் முறை கையாளப்படுகிறது. இந்த முறையில் சில்வர் அயோடைடு, சோடியம் குளோரைடு, பொட்டாசியம் அயோடைடு, போன்ற வேதிப்பொருள்கள், துகள் வடிவில் எடுத்துச் செல்லப்பட்டு மேகங்களின் மீது தூவப்படுகின்றன. இந்தத் துகள்கள் ஒரு பிடிமானமாகச் செயல்பட்டு, மழைத்துளிகளை ஒன்றிணைக்கின்றன.
இந்த நிகழ்வானது, மூன்று வெவ்வேறு முறைகளில் நிகழ்த்தப்படுகிறது.
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேதிப்பொருள்கள், ஒரு விமானத்தின் கீழ்ப்பகுதியில் கட்டப்பட்டு, மேகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே பரப்பப்படுகின்றன.
- சிறு சிறு ராக்கெட்டுகளின் உதவியுடன், இந்த வேதிப்பொருள்கள் மேகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே பரப்பப்படுகின்றன.
- பெரிய பெரிய மலைப்பகுதிகளில் சிறிய கோபுரங்கள் (towers) அமைக்கப்படுகின்றன. அவற்றில் இந்த வேதிப்பொருள்கள், சேமித்து வைக்கப்படுகின்றன. மழை மேகங்கள் அருகில் வரும்போது இந்த கோபுரங்களிலிருந்து, வேதிப்பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன.
எந்த ஒரு வேதிப்பொருளையும் பயன்படுத்தாமலேயே, இந்த மேக விதைப்பு எனும் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த முறையில் சிறுசிறு ட்ரோன்கள் மேகத்திற்கு அனுப்பப்படுகின்றன. அங்கே சென்ற இந்த ட்ரோன்கள், அந்த மேகங்களுக்கு சிறிய அளவில் மின்னோட்டத்தை அளிக்கின்றன. இதனால், ஏற்படும் சிறுசிறு அதிர்வுகளின் காரணமாக அந்த மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மழையாகப் பொழிகின்றன.
அமெரிக்கா, இந்த மேக விதைப்பு எனும் முறையை, போருக்காகவும் பயன்படுத்தி உள்ளனர். துபாய் மற்றும் சீனா போன்ற நாடுகளில், செயற்கை மழையை உருவாக்குவதற்காகவே, தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மேக விதைப்பு எனும் இந்த முறையினால் மழை பெய்வதற்கான வாய்ப்பைத் துரிதப்படுத்தவோ, அல்லது மழையை அதிக அளவில் பெய்ய வைக்கவோ மட்டுமே முடியும்.
புதிதாக மேகங்களை உருவாக்கவோ அல்லது குறைவான ஈரப்பதம் உள்ள மேகங்களிலிருந்து மழையை பொழிய வைக்கவோ முடியாது.
உலகின் முதல் செயற்கை மழை:
1946 ஆம் ஆண்டிலேயே மேக விதைப்பு எனும் இந்த முறையானது நியூயார்க் நகரத்தில், ஒரு சோதனையாகச் செய்யப்பட்டது. இந்த சோதனையில், இரண்டரை கிலோ அளவுள்ள உலர் பனியானது (dry ice) மேகத்தின் மீது தூவப்பட்டது. பிறகு அங்கிருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில், மழைப்பொழிவு நிகழ்ந்தது. இதுவே மனித இனத்தால் நிகழ்த்தப்பட்ட முதல் செயற்கை மழை ஆகும்.
![]() |
The first artificial rain Image: wikimedia commons |
இப்போது இந்தக் கதைக்கு வருவோம். சீனா எப்படி மழையைத் தடுத்து நிறுத்தியது?
பெய்ஜிங் நகரத்தில் உள்ள மைதானத்திற்கு, மழை வரப்போவதை அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்திருந்தது. எனவே அந்த மைதானத்தில் கூட வேண்டிய மேகங்களில் உள்ள மழையை, முன்பாகவே, மேகவிதைப்பு என்னும் முறையினைப் பயன்படுத்தி அவர்கள், பெய்ய வைத்து விட்டனர். எனவே அந்த மைதானத்தில் பெய்யவிருந்த மழை தடுக்கப்பட்டது. இதே முறையில் 2015 ஆம் ஆண்டில், ரஷ்யாவும் ஓரிடத்தில் பெய்ய வேண்டிய மழையைத் தடுத்து நிறுத்தினர்.
இந்தியாவிலும், சென்ற ஆண்டில், கான்பூர் எனும் பகுதியில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் (IIT) மேக விதைப்பு பற்றிய, சோதனைகள் நிகழ்த்தப்பட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
மேக விதைப்பின் சிக்கல்கள் :
இந்த முறையில் சில சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஓரிடத்தில் பெய்ய வேண்டிய மழை, வேறொரு இடத்தில் பெய்வதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று, சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மேக விதைப்பில் பயன்படுத்தப்படக்கூடிய வேதிப் பொருள்களால் இன்று வரையில், மனிதர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இந்த முறையைப் பல நாடுகள் பயன்படுத்தும்போது, வேதிப்பொருள்களின் அளவு அதிகரிக்கக்கூடும். அதனால், மனிதர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று, சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த முறையின் மூலமாக, ஒரு நாட்டிற்குச் சென்று மழையாகப் பெய்ய வேண்டிய மழை மேகங்களிலிருந்து, வேறொரு நாடு, முன்னதாகவே மழையைப் பெய்ய வைத்து விடுவதனால், அந்நாட்டு மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகள் இப்போது, சிறிய அளவில் உருவாகத் தொடங்கியுள்ளன.
மேக விதைப்பின் நன்மைகள் :
இந்தோனேசியாவில், புயல் மழையைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த முறையைப் பயன்படுத்தியுள்ளனர். அதாவது, ஒரே இடத்தில் கூடி, பெரிய மழையாகப் பெய்ய வேண்டிய மழை மேகங்களை, அவை ஒரு இடத்தில் கூடும் முன்னதாகவே, பெய்ய வைத்து விட்டனர். இதனால், அந்த நாட்டிற்கு புயலால், ஏற்படவிருந்த பாதிப்புகள் தடுக்கப்பட்டன.
இதேபோல் விவசாய நிலங்களில் அதிகமான மழைப்பொழிவை தடுக்கவும் இந்த மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது.
துபாயில் ஏற்பட்ட கனமழை :
![]() |
Image: pixabay |
ஐக்கிய அரபு நாடுகளில் (UAE) மழை அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் இந்த நாடுகளில், அதிக அளவில் பாலைவனங்களே உள்ளன. இந்த நாடுகளில், ஒரு வருடத்திலேயே, 140 - 200 mm எனும் அளவில் தான் மழை பொழிகிறது. எனவே, இந்த நாடுகள் பெருமளவில் மேக விதைப்பையே நம்பியுள்ளனர்.
இந்த வருடத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதியில், ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த, துபாய் நகரத்தில் பெய்த கனமழையினால், ஒரு நாளிலேயே 200 mm மழை பதிவாகியுள்ளது. இந்த மழை, சாதாரணமாக அந்த நகரத்தில் இரண்டரை வருடங்களில் பெய்திருக்க வேண்டிய மழை ஆகும். துபாய் நகரம், அதிக அளவில் மேக விதைப்பினைப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம் என்று சமூக வலைதளங்களில் பலர், பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
![]() |
Image: pixabay |
ஆனால், பல வானிலை ஆய்வாளர்கள், இதற்கு மேக விதைப்பு ஒரு காரணம் அல்ல என்றே கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நிகழ்விற்கு, காலநிலை மாற்றமே ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. ஏனெனில், சென்ற வருடம் தான், துபாயின் வரலாற்றிலேயே மிகவும் ஒரு வெப்பமான வருடமாக உள்ளது. எனவே, சென்ற வருடத்தில், அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக அந்த நகரத்தைச் சுற்றியுள்ள, நீர் அனைத்தும் ஆவியாக சென்றிருக்கக்கூடும். அந்த நீராவி தான் வருடத்தில் கனமழையாகப் பொழிகிறது என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த காலநிலை மாற்றத்திற்கு, புவி வெப்பமயமாதலே ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. மரம் வளர்த்தேன் மூலமாகவும், அதிகப்படியான கார்பன் வெளியேற்றத்தை தடுப்பதன் மூலமாகவும் மட்டுமே, புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும்.
இதனைத் தடுக்காமல் விட்டுவிட்டால், இன்று துபாயில் நடந்த நிகழ்வு, நாளை நம் நாட்டிலும் கூட நடக்கலாம். எனவே....
மரம் வளர்ப்போம்! சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!!