பூமியில் உயிரினங்களின் முடிவு

Image: pixabay

பூமியில் உயிர்கள் உருவாகத் தொடங்கி 400 கோடி வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இந்த 400 கோடி வருடங்களில் விண்கற்களின் தாக்குதல்கள், காலநிலை மாற்றங்கள் போன்ற நிகழ்வுகளால், பல்வேறு இனங்கள் அழிந்து, பல புதிய உயிரினங்கள் உருவாகி இன்றுவரையில், பூமியில் உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 

ஆனால், பூமியில் உயிர்கள் நிலையானவையாக இருக்க முடியாது. ஏனென்றால் பூமியே நிலையான ஒன்று அல்ல. 750 கோடி வருடங்களுக்குப் பிறகு சூரியனில் உள்ள எரிபொருள்கள் அனைத்தும் தீர்ந்து, நம் சூரியன் ஒரு சிகப்பு ராட்சத நட்சத்திரமாக மாறும்பொழுது நம் பூமியை விழுங்கிவிடும் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் பூமியில் எந்த ஒரு உயிரும் இருக்காது. பூமியில் உள்ள உயிரினங்கள் சில நூறு கோடி வருடங்களிலேயே முழுவதுமாக அழிந்து விட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

அந்த வகையில், பூமியில் உள்ள உயிர்கள் முழுவதும் அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் என்னென்ன என்பதனை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம். 

விண்கற்களின் தாக்குதல் :

Image: pixabay

6.6 கோடி வருடங்களுக்கு முன்பாக மெக்ஸிகோ வளைகுடாவில் விழுந்த விண்கல் ஒன்றினால் ஒட்டுமொத்த டைனோசர் இனமும் அழிந்து அவற்றுடன் வேறு சில வகை உயிரினங்களும் அழிந்தன. ஆனால், அந்த நேரத்தில் மனித இனம் உருவாக்கப்படவில்லை. ஒருவேளை அந்த விண்கல் பூமியைத் தாக்கவில்லை என்றால், இன்றுவரையில் டைனோசர்கள்தான் இந்த பூமியை ஆண்டு கொண்டிருக்கும். நாம் மறைந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அந்த வகையில், இந்த விண்கல்லின் தாக்குதல் மனிதர்களுக்குப் பாதுகாப்பானதாகவே அமைந்தது. டைனோசர்களைப் போல எதிர்காலத்தில் விண்கற்களின் தாக்குதலால், மனித இனம் மொத்தமும் அழிக்கப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

ஏனென்றால் ஒவ்வொரு 10 கோடி வருடங்களிலும் ஒரு முறையாவது, பெரிய அளவிலான விண்கற்கள் பூமியைத் தாக்குகின்றன. இவை பூமியைத் தாக்கும் பொழுது பூமியில் உள்ள நீர் அனைத்தும் ஆவியாகிவிடும். இதனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் (மனிதன் உட்பட) அழிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போதைய சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய விண்கற்களான Pallas மற்றும் Vesta போன்றவற்றால் மட்டுமே இது சாத்தியம். இந்த இரண்டு விண்கற்களின் விட்டமும் 500 கிலோமீட்டர்களுக்கு மேல் இருக்கும். 

440 கோடி வருடங்களுக்கு முன்பு Theia என்னும் குறுங்கோள், பூமியைத் தாக்கியதால்தான் நிலவு உருவானது. ஆனால் அந்த நேரத்தில் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்கவில்லை. மற்றொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 17,000 விண்கற்கள் பூமியில் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றில் 500 வெண்கற்கள் மட்டுமே பூமியின் தரையை அடைகின்றன. ஆனால், இவை அனைத்தும் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால், மனிதர்களுக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. 

உயிர்வளி நீக்கம் (deoxygenation) :

250 கோடி வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த "The Great oxidation event" எனும் நிகழ்வின் காரணமாகவே பூமியில் அதிக அளவிலான ஆக்சிஜன் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில், அதிக அளவில் உருவாகிய, சைனோ பாக்டீரியாக்கள் (அல்லது) நீலப்பச்சை பாசிகள், நம் வளிமண்டலத்தை ஆக்சிஜனால் நிரப்பின. 

ஆனால், 45 கோடி வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த Late Ordovician இனப் பேரழிவின்போது, வளிமண்டலத்தில் இருந்த ஆக்சிஜன் பெருமளவு குறைந்திருந்தது. அந்த நேரத்தில், பூமியிலிருந்த அனைத்து கண்டங்களும் கோண்டுவானா எனும் ஒரே கண்டமாக  இருந்தன. மேலும், பெருமளவிலான உயிர்கள், கடலில் தான் இருந்தன. தாவரங்கள் நிலப்பரப்பிற்கு வரத் தொடங்கியிருந்தன. அப்பொழுது ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால், உலகம் முழுவதும் பனியால் சூழப்பட்டது. இந்நிகழ்வு, பல இனங்களைக் கொன்றது. 
இந்த நிகழ்வு இரண்டாம் முறை நிகழ்ந்த போது, பூமியில் ஆக்சிஜனின் அளவு, பெருமளவு குறைந்தது.

இதற்கான காரணம் இன்று வரையில் தெளிவுபடுத்தப்படவில்லை. மேலும் இந்த ஆக்சிஜன் குறைபாட்டினால், அப்போதைய உலகின் 80% உயிரினங்கள் அழிக்கப்பட்டன. தற்பொழுதும் கூட, காலநிலை மாற்றங்களால், கடல் பரப்பில் உள்ள ஆக்சிஜன் பெருமளவில் குறைந்து கொண்டிருப்பதாகவும், அதனால் சில கடல் வாழ்  உயிரினங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காற்று மாசுபாடு அதிகரித்துக் கொண்டே இருந்தால், எதிர்காலத்தில் பெருமளவில் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படும் என்று பல ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது. 

காமா-கதிர் வெடிப்பு (Gamma-ray burst) : 

Image: wikimedia commons

காமா-கதிர் வெடிப்பு என்பது, புதிதாக நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கும்  விண்மீன் மண்டலங்கள் (Galaxies), நியூட்ரான் நட்சத்திரங்கள், இரட்டைப் பல்சர்கள், போன்றவற்றில் நிகழும் ஒரு வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பில், அதிக அளவிலான காமா கதிர்கள் வெளியிடப்படுகின்றன. ஒருவேளை, நம் பால்வெளி மண்டலத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தால், நமது பூமியில் பெரிய அளவிலான இனப்பேரழிவு ஏற்படும். அந்த வெடிப்பினால் ஏற்பட்ட கதிர்வீச்சுகள் வெறும் 10 வினாடி, நம் பூமியைத் தாக்கினால் கூட, நமது ஓசோன் படலத்தில் பாதி அழிக்கப்பட்டுவிடும். இதனால் பல்வேறு வகையான உயிரினங்கள் அழிக்கப்படலாம். ஆனால், இந்த காமா-கதிர் வெடிப்பு, இனிமேல்  நம் பால்வெளி மண்டலத்தில் நிகழ, வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

இந்த காமா கதிர்கள், பூமியின் வளிமண்டலத்தைத் தாக்கும் பொழுது, அங்குள்ள ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் இணைந்து, நைட்ரஜன் டைஆக்சைடு வாயுவாக மாறுகின்றன. இந்த வாயுக்கள் தான், பூமியில் பெருமளவில் புகைமூட்டம் ஏற்படுவதற்கு காரணமாகின்றன. எனவே, காமா கதிர்கள் பூமியைத் தாக்கினால், பூமியின் வளிமண்டலம் முழுவதும் நைட்ரஜன் டைஆக்சைடு, வாயுவால் நிரப்பப்பட்டு விடும். இதனால் சூரிய ஒளியும் மறைக்கப்படும். 

இதன் காரணமாக,பூமி முழுவதும் பனியால் சூழப்படும். 45 கோடி வருடங்களுக்கு முன்பு பூமி பணியால் சூழப்பட்டதற்கும், இந்த காமா கதிர் வெடிப்பே ஒரு காரணமாக இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

காமா-கதிர் வெடிப்பினால் இல்லையென்றாலும், ஆக்சிஜன் குறைபாட்டினால் கண்டிப்பாக ஒருநாள் இவ்வுலக உயிர்கள் அனைத்தும் அழியும். ஏனென்றால், இன்னும் சில நூறு கோடி வருடங்களில், பூமியில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவானது பெருமளவில் குறையும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால், கார்பன் டை ஆக்சைடு வாய்வை எடுத்துக் கொள்ளும் தாவரங்கள் அனைத்தும் அழிக்கப்படும். எனவே, ஆக்சிஜன் குறைபாடும் ஏற்பட்டு உலக உயிர்கள் அனைத்தும் அழிந்து போகும். ஆனால், இவை அனைத்தும் பல நூறு கோடி வருடங்களுக்குப் பிறகே நிகழும்.

----நன்றி----

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post